ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாக்குகள் திமுக கூட்டணிக்கு கிடைக்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை கடற்கரை சாலையில் உள்ள பாரத சாரண சாரணியர் இயக்க அலுவலகத்தில்
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது..
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
”சென்னையில் ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக கல்வி குறித்த கருத்தரங்கும் நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர
பிரதான் கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது தேசிய கல்விக் கொள்கையில் தமிழ்நாடு அரசுக்கு இருக்கக்கூடிய ஆட்சேபனைகள் குறித்து விரிவாக தெரிவிக்கப்படும்.
தேசியக் கல்வி கொள்கை குறித்த தமிழக அரசின் நிலைப்பாடுகளை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதாப்புடன் விரிவாக எடுத்துக் கூறுவதற்கு அவரை நேரில் சந்திப்பது தொடர்பாக முதலமைச்சருடன் கலந்த ஆலோசனை செய்து பின்னர் அறிவிக்கப்படும்.” என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களின் ஆதரவு திமுக விற்கு கிடைக்குமா என பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் “அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிதி சார்ந்த பிரச்சினைகள் மட்டுமே நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதர கோரிக்கைகளை தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி திமுக அரசு நிறைவேற்றியுள்ளதால் வாக்குகள் கிடைப்பதில் சிக்கல் இருக்காது” என அவர் தெரிவித்தார்.
– யாழன்