இலங்கையில் அதிவிரைவு ரயில் மோதி 6 யானைகள் உயிரிழப்பு !

இலங்கையின் வனவிலங்கு சரணாலயம் அருகே அதிவிரைவு ரயில் மோதி 6 யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் மின்னேரிய-கல்லோயா வழித்தடத்தில் கடந்த வியாழன்கிழமை அதிகாலை அதிவிரைவு ரயில் ஒன்று சென்றுள்ளது. இந்த நிலையில் ஹபரானா நகரில் உள்ள வன விலங்கு சரணாலயம் அருகே ரயில் சென்றபோது அந்த தண்டவாளத்தை சில காட்டு யானைகள் கடக்க முயன்றது.

அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்ற யானைகள் மீது ரயில் மோதியதில் 6 யானைகள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. மேலும் இதில் படுகாயமடைந்த யானைகளை வனத்துறையினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அதேபோல் யானைகள் மீது ரயில் மோதிய விபத்தில் ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டன. ஆனால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த சம்பவம் மிக மோசமான வனவிலங்கு விபத்து என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அந்த நாட்டின் சுற்றுச்சூழல் துறை துணை அமைச்சர் ஆண்டன் ஜெயக்கொடி கூறுகையில், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க தண்டவாளம் அருகே யானைகள் செல்வதை தடுக்க மின் தடுப்பு வேலிகள் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.