ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். மேலும் ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதால் உக்ரைன் போருக்கு மறைமுகமாக நிதியளிப்பதாக குற்றம்சாட்டுகிறார். இதனை தொடர்ந்து ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்த உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் தனிப்பட்ட முறையில் உறுதியளித்ததாக அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
ஆனால், இதுதொடர்பாக எந்தவித உரையாடலும் நடக்கவில்லை என இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுப்புத் தெரிவித்துள்ளது. இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கினால் வரி விதிப்பு அதிகரிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அமெரிக்க நாடாளுமன்றத்தில் அடுத்த வாரமே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் எக்ஸ் தளத்தில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.







