செங்கல்பட்டில் அரசுப்பணி வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டு அருகே உள்ள பெரியநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரின் மனைவி வேதவள்ளி பட்டப்படிப்பு முடித்து விட்டு அரசுப்பணிக்காக காத்திருந்தார். இந்த நிலையில் சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் லோகநாதனின் மனைவிக்கு கேந்திர வித்யாலயா பள்ளியில் வேலை வாங்கித் தருவதாக தன்னுடைய நண்பர் மூலம் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.c
இதை உண்மை என நம்பிய லோகநாதன் 13 லட்சம் ரூபாயை ரவிக்குமாரிடம் கொடுத்துள்ளார். ஆனால், ஓராண்டாகியும் வேலை வாங்கித் தராததால் காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ஏராளமான நபர்களிடம் 50 லட்சம் ரூபாய் வரை ரவிக்குமார் மோசடி செய்தது தெரிய வந்தது.
இதனையடுத்து ரவிக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சமீபகாலமாக இதுபோன்று அரசுப்பணி வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்து வருபவர்களை காவல்துறை கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது.








