மதுரை அருகே கொரோனாவால் பாதிக்கப்பட்ட 50 பேரை இரண்டே ஆம்புலன்ஸில் ஏற்றிச்சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள பொன்னமங்களம் கிராமம். இங்கு கொரானாவால் பாதிக்கப்பட்ட 10 பேர் உயிரிழந்தனர். இதையடுத்தும் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து, அந்த கிராமத்தில் 2 நாட்களுக்கு முன் கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
பின்னர் தொடர்ந்து, சுகாதாரத்துறையினர் கிராமம் முழுவதும் கிருமிநாசினி தெளித்தும், அப்பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாகவும் அறிவித்தனர். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை முகாமிற்கு அழைத்து செல்ல அரசு ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். நீண்ட நேரமாகியும் வராததால், தனியார் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டன. இரண்டே ஆம்புலன்ஸ்களில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை, சுகாதாரத்துறையினர் அனுப்பி வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவர்கள், மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள காமராஜர் பல்கலைக்கழக, ஆண்கள் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரானா கண்காணிப்பு மையத்திற்கு, அனுப்பப்பட்டனர். மேலும் கொரோனா பாதிக்கப்பட்ட சிலர், பயத்தின் காரணமாக, ஆம்புலன்ஸில் ஏறாமல் ஓடி ஒளிந்து கொண்டனர், பிறகு அவர்களிடம் சுகாதாரத்துறையினர் தொற்றின் தீவிரத்தன்மையை எடுத்துக் கூறி, ஆம்புலன்ஸின் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
2 ஆம்புலன்ஸ்களில் 50 பேரை அழைத்துச் சென்றதை அந்தப் பகுதியினர் சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.







