பழனி தைப்பூச தேரோட்டம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்!

பழனியில் தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர். அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் தைப்பூசத்திருவிழா கடந்த 29ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.…

பழனியில் தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் இன்று
நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர்.

அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் தைப்பூசத்திருவிழா கடந்த
29ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில்
நடைபெறும் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று
நடைபெற்றது.

ஊர்க்கோவிலான பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று‌ பகல் 12 மணியளவில் அருள்மிகு முத்துக்குமாரசுவாமி-வள்ளி,தெய்வானை சமேதராக தேர்‌ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மாலை 4.30மணியளவில் துவங்கிய தேரோட்டம் நான்கு ரதவீதிகளிலும் வலம் வந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து திருத்தேரை இழுத்தனர். வள்ளி தெய்வயானை சமேதராக‌ தேரில் எழுந்தருளிய அருள்மிகு முத்துக்குமாரசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தேராட்டத்தில் பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன், மாவட்ட காவல்துறை எஸ்பி பாஸ்கரன், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், அரசு அதிகாரிகள், பழனி நகர முக்கிய பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வருகிற 7ம் தேதி இரவு தெப்பத்தேரோட்டமும், தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சியுடன் தைப்பூசத் திருவிழா நிறைவடைகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.