ராஜபக்சே உள்ளிட்ட 4பேர் கனடாவில் நுழைய தடை – கனடா அரசு அதிரடி

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய  போரில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக மஹிந்த ராஜபக்சே உள்ளிட்ட நான்கு பேருக்கு கனடாவில் நுழைய கனடா அரசு தடைவிதித்துள்ளது 1983 முதல் 2009 காலம்…

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய  போரில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக மஹிந்த ராஜபக்சே உள்ளிட்ட நான்கு பேருக்கு கனடாவில் நுழைய கனடா அரசு தடைவிதித்துள்ளது

1983 முதல் 2009 காலம் வரை விடுதலை புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஆயுதம் தாங்கிய போர் நடைபெற்றது. கடந்த 2009 காலகட்டத்தில் போர் உக்கிரமான நிலையில் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் சுட்டு கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.

இந்த போரின் போது மஹிந்த ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக பல மனித உரிமை ஆணையங்கள் குற்றம் சாட்டின. இந்நிலையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட  மஹிந்த ராஜபக்சே உள்ளிட்ட நான்கு பேருக்கு கனடாவில் நுழைய  கனடா சிறப்பு  பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் கனடா அரசு  தடைகளை விதித்துள்ளதாக வெளியுறவுத்துறை  அமைச்சர் மெலனி ஜோலி நேற்று  அறிவித்துள்ளார்.

மேலும் சிறப்புப் பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின்படி  கனடாவில் அவர்கள் வைத்திருக்கும் அனைத்து சொத்துக்களையும்  முடக்கி, குடியுரிமை மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர்களை கனடாவிற்குள் நுழைய தடை விதிக்க முடியும் என மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் மக்கள் அவதிப்படுவதையும், ஆட்சியாளர்கள் தப்பித்து சென்றதையும் உலகமே வேடிக்கை பார்த்தது. இந்த நிலையில் கனடா அரசின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் கவனத்தை பெற்று வருகின்றன.

இலங்கையை முன்னேற்றவும் கனடா உதவும்

“கடந்த நான்கு தசாப்தங்களாக, ஆயுத மோதல்கள், பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமின்மை மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் காரணமாக இலங்கை மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இலங்கையில் அமைதி, நல்லிணக்கம், நீதி ஆகியவற்றை நிலைநிறுத்த கனடா  உறுதியாக உள்ளது.

சர்வதேச சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிரான சர்வதேச தண்டனையை கொண்டு வர கனடா இன்று தீர்க்கமான நடவடிக்கை எடுத்துள்ளது. உள்நாட்டு நெருக்கடியைத் தீர்ப்பதற்கான சர்வதேச உதவி மூலம் இலங்கையில் சமாதானம் , வளர்ச்சி பாதையை ஆதரிக்க கனடா தயாராக உள்ளது.” என கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.