இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர் ஒவர் மாயமாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டி வந்து இலங்கை கடல் வளத்தை அழைப்பதாகக் கூறி இலங்கை வடக்குப் பகுதியில் மீனவர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேற்று இலங்கையின் முல்லைத்தீவு முதல் பருத்தித்துறை வரை கடலில் போராட்டங்கள் நடத்திய நிலையில் எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை பிடிக்க இலங்கை கடற்படையினர் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை பகுதியிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற சில படகுகள் இலங்கை காரைநகர் கோவலம் கடற்பகுதிக்குள் வந்ததாக கூறி அந்த படகுகளை விரட்டி சென்ற போது இலங்கை கடற்படையின் கப்பல் தமிழக மீனவரின் விசைப்படகு மீது மோதியது.
இதில் மீனவர்களின் படகு ஒன்று சேதமடைந்தது கடலில் மூழ்கியது. அப்போது படகில் இருந்த 3 மீனவர்களில் 2 மீனவர்கள் இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட நிலையில் ஒரு மீனவரை காணவில்லை. அவரை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை கப்பல் தமிழக மீனவரின் படகு மீது மோதி ஒரு மீனவர் மாயமான செய்தி மீனவர்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.








