இந்தியக் கடற்படையை பலப்படுத்தும் விதமாக புதிதாக வாங்கப்பட்ட 11வது P-8i போர் விமானம் கோவா வந்து சேர்ந்துள்ளது.
இந்தியக் கடற் பரப்புகளை பாதுகாப்பதற்கு புதிய போர்க்கருவிகளை அரசு கொள்முதல் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்திய பெருங்கடல் பகுதியை பலப்படுத்தும் நோக்கில் நீர்மூழ்கி கப்பலுக்கு எதிரான P-8i (LRMRASW) போர் விமானத்தை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது. இந்திய கப்பல் படைக்கு இது 11வது P-8i போர் விமானமாகும்.
கடந்த 2009ம் ஆண்டு அமெரிக்க பாதுகாப்பு துறையிடம் 8 நீர்மூழ்கி கப்பலுக்கு எதிரான போயிங் P-8i போர் விமானத்தை வாங்குவதற்கு இந்திய அரசு ஒப்பந்தம் செய்தது. 2016ல் மேலும் 4 P-8i போர் விமானத்தை வாங்குவதற்கும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. இதனையடுத்து 9 மற்றும் 10வது போர் விமானங்கள் கடந்த 2016 மற்றும் 2020ல் இந்தியா வந்தது. தற்போது 11வது P-8i போர் விமானம் 30,000 கி.மீ தொலைவைக் கடந்து கோவா வந்து சேர்ந்துள்ளது.
இந்த தகவலை போயிங் நிறுவனம் உறுதிசெய்துள்ளது. தற்போது இந்தியா வந்துள்ள இந்த விமானம் பேரிடர் காலங்களில் மீட்பு பணிக்கும் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்தியக் கடற்படையை பலப்படுத்துவதற்கும், இந்திய பெருங்கடலில் வலிமையை நிலைநிறுத்துவதற்கும் இந்த விமானம் பயன்படும் என சொல்லப்படுகிறது.









