தமிழ்நாட்டில் மேலும் 303பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்தறை தெரிவித்துள்ளது
இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது. இதில், மாநில அரசுகளின் சுகாதாரத்துறை அமைச்சர்கள், தலைமை மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர்கள் காணொளி வாயிலாக பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா
” கோவிட் தொற்று அதிகரித்து வருவதால் அனைத்து மாநில அரசுகளும் எச்சரிக்கையுடனும் தயார் நிலையிலும் இருக்க வேண்டும். கோவிட் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். தடுப்பூசி போடப்படுவதையும் அதிகரிக்க வேண்டும். மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்” என தெரிவித்தார்.
மேலும் வரும் ஏப்ரல் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் அனைத்து மருத்துவமனைகளிலும் கோவிட் உள்கட்டமைப்புகளை உறுதிப்படுத்த தேவையான பயிற்சி ஒத்திகைகளை மாநில சுகாதார அமைச்சர்கள் மேற்கொள்ள வேண்டும்” எனவும் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நோய் தொற்று குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 303 பேர் கொரோனா பாதிப்பு அடைந்துள்ளனர். இதில், 159ஆண்கள் மற்றும் 144 பெண்கள் அடங்குவார்கள். அதிகபட்சமாக சென்னையில் 101 பேருக்கும், செங்கல்பட்டில் 29 பேருக்கும் கொரோனா தொற்றினால் பாதிப்பு அடைந்துள்ளனர்.







