அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்கள் 3000-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சென்னை பல்லவன் இல்லத்திலிருந்து கோட்டை நோக்கி பேரணி மேற்கொண்டனர்.
அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதிய உயர்வு குறித்த தேர்தல் கால வாக்குறுதியை தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றக் கோரி அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் சார்பில் கோட்டை நோக்கி கோரிக்கை பேரணி சென்னை பல்லவன் இல்லத்தில் இருந்து கோட்டை நோக்கி நடைபெற்று வருகிறது. போக்குவரத்து ஓய்வூதியதாரர்கள் தங்கள் குடும்பத்துடன் 3000 பேர் வரை ஈடுபட்டனர்.
அரசு போக்குவரத்து கழகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து, ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பென்சனுடன் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் மிக குறைவான பென்சனையே அவர்கள் பெற்று வருகின்றனர். போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்கள் தவிர, மற்ற அனைத்து அரசு தரப்பு ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுடன் கூடிய பென்சன் வழங்கப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள் : ஏழை குழந்தைகளின் மருத்துவச் செலவுகளுக்காக ரூ.6.20 கோடியை வழங்கிய BTSன் ஜங்கூக்…!
தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக ஆட்சியில் நிறுத்தம் செய்யப்பட்ட அகவிலைப்படி உயர்வினை 100 நாட்களுக்குள் வழங்கிவிடுவதாக வாக்குறுதி அளித்த திமுக அரசு, ஆட்சியமைத்து பல நாட்களை கடந்தும் மேற்கண்ட வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை. இதனால் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 88 ஆயிரம் பேர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்களுக்கு மட்டும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் கூட இல்லாமல், குறைவான பென்சனில் பொருளாதார வசதியின்றி மருத்துவ சிகிச்சை பெற முடியாமல், கடுமையான நோயுடன் போராடி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருவதோடு நீதிமன்றம் வரை சென்றும் தற்போதைய திமுக அரசு செவிசாய்க்காமல் இருப்பது மிகுந்த மனவேதனை அளிப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
’கடந்த நவம்பர் 2015 முதல் 90 மாதங்களாக வழங்காமல் உள்ள அகவிலைப்படி உயர்வை, நீதிமன்றம் வழங்க உத்தரவிட்டது, இருப்பினும் அது வழங்கப்படாமல் உள்ளது. அதனை வழங்க வேண்டும். கடந்த ஏப்ரல் 2022 முதல் இன்று வரை பணி ஓய்வு விருப்ப ஓய்வு/பணிக்காலத்தில் மரணமடைந்தவர்களின் வருங்கால வைப்பு நிதி பணிக்கொடை விடுப்பு சம்பளம் ஓய்வூதிய ஒப்படைப்பு தொகையை வழங்க வேண்டும்.
போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவ படி ரூபாய் 100-ஐ, 300 ஆக உயர்த்தி தர வேண்டும். இந்த விவகாரத்தில் அரசு காலம் தாழ்த்தாமல் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வூதியம் மீதான அகவிலைப்படியை உடனடியாக உயர்த்த வேண்டும்’ ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கோட்டை நோக்கி இன்றைய பேரணி நடைபெற்றது.
காவல்துறையினர் பேரணியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முற்பட்டபோது சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.







