கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு: தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும். அதற்கு சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று…

கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும். அதற்கு சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட ரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளைக் கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி, அவர்களும் அனைத்து வகையிலும் சமூக நீதியின் பயன்களைப் பெற, அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழக சட்டபேரவையில் இன்று தீர்மானத்தை கொண்டு வந்து உரையாற்றினார்.

தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய அவர், “கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களையும் பட்டியலில் சேர்த்து, அந்தப் பட்டியலின மக்களுக்கும் அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை இந்த மாமன்றத்தில் கொண்டு வர விரும்புகிறேன்.ஆதி திராவிடர்களாக இருந்து மதம் மாறிய பின்னரும் தீண்டாமை உள்ளிட்ட சாதிய வன்கொடுமைகளுக்கு அவர்கள் ஆளாவது தொடரவே செய்கிறது. எனவே இதனை கனிவோடு நாம் கவனிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். நமது நாட்டின் அரசியல் சட்டப்படி இந்து, சீக்கியர், பௌத்த மத்தைத் தவிர்த்த பிற மதங்களைச் சேர்ந்த யாரும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவராகக் கருதப்பட முடியாது. வரலாற்று ரீதியாகவே அவர்கள் ஆதி திராவிடர் வகுப்பினராக இருக்கும்போது, அவர்களுக்குப் பட்டியலின வகுப்புக்கான உரிமைகளை வழங்குவதே சரியானதாக இருக்கும். அதன் மூலமாகத்தான் அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை கிடைக்கும்.

அதன் மூலமாக சமூகத்தில் அவர்களுக்கான உயர்வும், மேம்பாடும் கிடைக்கும். மதம் மாறிவிட்டார்கள் என்பதற்காக சமூகரீதியாக அவர்களுக்குத் தரப்பட்டு வந்த, அதே சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்கள் அனுபவித்து வரும் உரிமைகளை இவர்களுக்குத் தர மறுப்பது சரியல்ல என்பதுதான் நமது நிலைப்பாடு. மனிதர்கள் தாங்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்ற உரிமை உண்டு. சாதிய ஏற்றத்தாழ்வை வைத்து எந்த வகையில் அடக்கி ஒடுக்கினார்களோ, அதே சாதியை வைத்தே இட ஒதுக்கீடு வழங்கி உயர்வடைய வைக்கும் தத்துவம்தான் சமூகநீதித் தத்துவம். இந்த சமூகநீதித் தத்துவத்தை அனைத்து வகையிலும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசினுடைய நோக்கம். அந்த வகையில் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும், அரசியல் சட்ட சமூக நீதி உரிமைகள் தரப்பட வேண்டும் என்பதே சரியான நிலைப்பாடு.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில்.பட்டியலின மக்களுக்கு இணையாக கிறிஸ்தவ ஆதிதிராவிடர்களும் சலுகைகள் பெறும் வகையில் அரசாணைகள் வெளியிட்டு உரிய பயன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இடஒதுக்கீடு நீங்கலாக மற்ற உரிமைகள் தரப்பட்டு வருகின்றன. ஒன்றிய அரசால் பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் அனைத்துக் கல்வி உதவித் தொகைத் திட்டங்களும் கிறித்துவ ஆதிதிராவிடர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. முழுநேர முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை, வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி பயில்பவர்களுக்கான ஊக்கத்தொகை, உயர்கல்வி சிறப்பு ஊக்கத்தொகை அனைத்தும் இவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் இடஒதுக்கீட்டையும் வழங்குவதே சரியானதாகவும் முறையானதாகவும் இருக்கும் என்று நினைக்கிறோம்.

அரசியலமைப்பு திருத்த ஆணை 1950-ன்படி, இந்து மதத்தில் இருந்து வேறுபட்ட மதத்தைக் கூறும் எவரும் அட்டவணை சாதிகளின் உறுப்பினராக ஆக முடியாது. ஆனால், 1956 ஆம் ஆண்டு சீக்கிய மதத்தைப் பின்பற்றுபவர்களையும், 1990 ஆம் ஆண்டு பவுத்த மதத்தைப் பின்பற்றுபவர்களையும், பட்டியல் சாதியினராகச் சேர்க்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது. இதே போன்ற திருத்தத்தைத்தான் கிறித்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களும் எதிர்பார்க்கிறார்கள். இந்தக் கோரிக்கையை பல்வேறு தரப்பினரும் அரசுக்கு வைத்திருக்கிறார்கள். ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மதம் மாறும்போது, தானாக ஆதி திராவிடர் வகுப்பில் இருந்து வெளியேறி விடுகிறார்கள் என்றும்; மதம் மாறிய பின்னும் அவர்களுக்கு ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று சாதிச் சான்றிதழ் இருந்தால் அது செல்லாது என்றும்; மதம் மாறியவர்களுக்கு ஆதிதிராவிடர் வகுப்பு சான்றிதழ் வழங்கப்பட்டால் அது போலிச் சான்றிதழ் என்றும்; தேசிய ஆதி திராவிடர் ஆணையத் துணைத் தலைவர் கடந்த ஆண்டு சொல்லி இருந்தார்.

அப்போது பல்வேறு தரப்பினரும் இதற்குக் கடுமையாக எதிர்ப்பை தெரிவித்தார்கள். இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான ஆணையம் ஒன்றை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையம் இந்தியா முழுமையும் சுற்றுப்பயணம் செய்து, அனைத்து மாநிலங்களின் கருத்தையும் பெற்ற பிறகே இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதனை வலியுறுத்தும் வகையில், பின்வரும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.

“இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட ரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளைக் கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி, அவர்களும் அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களைப் பெற, அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு இந்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது”. சமூக நீதியானது சம நீதியாக வழங்கப்பட வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்ட இந்தத் தீர்மானத்தை அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.