குன்னூரில் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த தந்தி மாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்துகொண்டு வழிபட்டனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் 500 ஆண்டுகாள பழமை வாய்ந்த தந்தி மாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலின் அருகே, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தந்தி கம்பம் நடப்பட்டது. அப்போது இங்கு, குதிரை லாயத்தில் இரவு தங்கிய காவலர் லாந்தர் மரத்தில் ஊஞ்சலாடும் குழந்தையைப் பார்த்ததாகவும், மறுநாள் இரவு பெரியவரின் கனவில் ஒரு குழந்தை தோன்றி, தான் லாந்தர் மரத்தடியில்தான் குடியிருக்கிறேன் என்று கூறி மறைந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் பிறகு இக்கோவில் தந்தி மாரியம்மன் எனப் பெயரிட்டு அழைக்கப்படுகிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் 40 நாட்களுக்கு பல்வேறு சமுதாய மக்கள் சார்பில் சித்திரை திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அவ்வகையில், இந்த ஆண்டு திருவிழா கடந்த 7ம் தேதி துவங்கி, தினமும் பல்வேறு உபயதாரர்கள் சார்பில் தேர் ஊர்வலம் நடைபெற்று வருகிறது.
இத்திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான, தேரோட்டம் நடைபெற்று, பக்தர்கள் தேரை இழுத்தனர். இதில் பங்கேற்ற பக்தர்கள் தேரின் மீது உப்பு வீசி பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். விழாவில் முன்னதாக வி.பி தெரு துருவம்மன் கோவிலில் இருந்து நடந்த அபிஷேக பொருட்கள், ஊர்வலத்தில் வாத்தியங்கள் முழங்க கிராமிய நடனங்களுடன் பல்வேறு கடவுள் வேடங்களிட்டும் மற்றும் மகளிர் ஆடல் பாடலுடன் ஊர்வலமாக வந்து கலந்து கொண்டனர்.
—-சௌம்யா.மோ






