நடிப்பிற்கு 3 ஆண்டு பிரேக் – நடிகர் விஜய் தரப்பு மறுப்பு!

தளபதி 68 படத்திற்கு பிறகு 3 ஆண்டுகள் நடிப்பதில் இருந்து ஓய்வு பெறப்போவதாக வெளியான தகவலை நடிகர் விஜய் தரப்பு மறுத்துள்ளது. சினிமாத் துறையில் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதான விசயம் இல்லை.…

தளபதி 68 படத்திற்கு பிறகு 3 ஆண்டுகள் நடிப்பதில் இருந்து ஓய்வு பெறப்போவதாக வெளியான தகவலை நடிகர் விஜய் தரப்பு மறுத்துள்ளது.

சினிமாத் துறையில் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதான விசயம் இல்லை. சினிமாத்துறைக்கு வருபவர்கள் அனைவரும் உச்சத்தை தொடுவதில்லை. அப்படியான உச்ச நட்சத்திரமாக புகழ்பெற வேண்டும் என்றால் அதற்கு கடின உழைப்பும் விடா முயற்சியும் தேவை. அப்படி தனது விடா முயற்சியாலும் கடின உழைப்பாலும் 30 ஆண்டுளை நிறைவு செய்துள்ள நடிகர் விஜய் பெற்ற வெற்றி என்பது சாதாரண வெற்றி அல்ல. நாளைய தீர்ப்பு தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் அடுத்த வாரிசு விஜய் தான் என்று சொல்லும் அளவிற்கு அவரது வளர்ச்சி உச்சத்தை தொட்டுள்ளது.

1992 இல் நாளைய தீர்ப்பு திரைப்படம் வெளியாகும் போது எஸ்.ஏ.சந்திரசேகர் கூட நினைத்திருக்க மாட்டார். அந்த அளவிற்கு விஜய்யின் வளர்ச்சி ஒவ்வொருவரையும் மலைக்க வைத்துள்ளது. இந்த வெற்றிக்கு பின்னால் விஜய் சந்தித்த அவமானங்கள் சிறிதல்ல. இன்று ரூ.100 கோடி வசூல் சாதனை, ரூ.200 கோடி வசூல் சாதனை என தமிழ் சினிமாவை இன்று உலகமே திரும்பி பார்க்கிறது என்றால் அதற்கு பின்னால் விஜய்யின் படங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. அப்படிப்பட்ட ஜாம்பவானாக, மாபெரும் ஆளுமையாக தமிழ் திரையுலகில் வளம் வரும் நடிகர் விஜய்க்கு சிறுவயதில் இருந்தே அரசியல் மீதும் அதீத ஆர்வம் உள்ளது. அதை பல தருணங்களில் தனது பேட்டிகளில் அவரே வெளிப்படுத்தியுள்ளார். மேலும் தனது அரசியல் வருகையை பலருக்கும் உணர்த்தும் விதமாக் சமீபகாலமாக தனது படங்களின் ஆடியோ வெளியீட்டு விழா மேடைகளிலும் குட்டி ஸ்டோரி என்ற பெயரில் பல மறைமுக அரசியல் கருத்துகளையும் கூறும் விஜய், அதன் மூலம் இளம் தலைமுறையினரையும் கவர்ந்து வருகிறார்.

அதற்காக சிறு சிறு முயற்சிகளாக மேற்கொண்டவர், ஒரு கட்டத்தில் தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி அதன் மூலம் படிக்கின்ற மாணவர்கள் முதல் கஷ்டத்தில் இருக்கும் ஒவ்வொருக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இது தவிர நடிகர் விஜய் பனையூரில் உள்ளஅலுவலகத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகளை அவ்வப்போது சந்தித்து ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அவரின் அறிவுறுத்தலின் படி அம்பேத்கர் பிறந்த நாளான்று அவரது சிலைக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இப்தார் நிகழ்ச்சிகளையும் நடத்தினர்.

மேலும் சமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை வரவழைத்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் வழங்கினார். அப்போது ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என மாணவர்கள் மத்தியில் பேசியிருந்தார். இந்த நிகழ்விற்கு பிறகு, நடிகர் விஜய் தனி கட்சி தொடங்கப்போகிறார், அரசியலில் காலூன்ற போகிறார் என்றெல்லாம் பரவலாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் விஜய் கவனம் செலுத்த போவதில்லை எனவும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 2026 ஆம் ஆண்டில் மாநாடுகள் நடத்த உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. அண்மையில் அவர் நடித்து வரும் லியோ படத்தின் நா ரெடி பாடல் கூட அரசியல் வருகைக்கான பாடலாக இருக்கும் பலராலும் பேசப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலையில் இருந்து லியோ படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய், வெங்கட்பிரபு உடனான தனது 68-வது படத்திற்கு பிறகு ஓய்வு பெற முடிவு செய்திருப்பதாக தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. மேலும் 2024 மே மாதத்திற்குள் லியோ படத்தின் படப்பிடிப்பை முடிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், நடிப்பை சிறிது காலம் நிறுத்தி விட்டு களப்பணிகளில் விஜய் கவனம் செலுத்த உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் இந்த தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்றும், இதில் துளிகூட உண்மை இல்லை என்றும் விஜய் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. ஏனென்றால் நடிகர் விஜய் லியோ படத்திற்கு பிறகு வெங்கட்பிரபு உடன் தளபதி 68-படத்திலும், அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் படத்திலும், மூன்றாவதாக மாற்றொரு படத்திற்கு கதை கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அடுத்த 3 முதல் 5 வருடங்களுக்கு அவர் கைவசம் நிறைய படங்கள் இருப்பதால் இனி வேறு யாருக்கும் கால்ஷீட் கொடுக்கும் நிலையில், விஜய் இல்லை என்பதாலையே, இது போன்ற தேவையில்லாத வதந்திகளை பரப்பி வருவதாக நடிகர் விஜய் தரப்பு தெரிவித்துள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.