மாநிலங்களவை தேர்தல்: தேர்தல் ஆணையத்தில் திமுக மனு!

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிகளுக்கு தேர்தலை நடத்தக்கோரி தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார். நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் வைத்தியலிங்கம் ஒரத்தநாடு தொகுதியிலும், கே.பி.முனுசாமி…

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிகளுக்கு தேர்தலை நடத்தக்கோரி தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.

நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் வைத்தியலிங்கம் ஒரத்தநாடு தொகுதியிலும், கே.பி.முனுசாமி வேப்பனஹள்ளி தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். இதனையடுத்து, தங்களது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அவர்கள் ராஜினாமா செய்தனர். இதேபோல, அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த முகமது ஜான் மாரடைப்பால் கடந்த மார்ச் மாதம் காலமானார்.

இதனையடுத்து, தமிழ்நாட்டிற்கான மாநிலங்களவை உறுப்பினர் காலியிடங்கள் எண்ணிக்கை 3 ஆக மாறியது.
இந்த நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, பி.வில்சன் எம்.பி ஆகியோர் இன்று நேரில் சென்றனர். காலியாக உள்ள 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பாலு, “மாநிலங்களவை தேர்தல் அறிவிப்பை வெளிடுவதில் தேர்தல் ஆணையம் தாமதிப்பது ஏன்? 3 எம்.பி பதவிகளுக்கும் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.