இந்தியாவுக்கு எதிரான பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி (4 நாள் ஆட்டம்) பிரிஸ்டலில் உள்ள கவுண்டி மைதானத்தில் இன்று தொடங்கியது.
மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய பெண்கள் அணியில், ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, பூனம் ராவத், ஹர்மன்பிரீத் கவுர், தீப்தி ஷர்மா, சினேஹ் ராணா, தனியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஜூலன் கோஸ்வாமி, பூஜா வஸ்ட்ராகர், ஷிகா பாண்டே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் பலருக்கு இது முதல் டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி, முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் லாரன் வின்ஃபீல்டு ஹில்-லும் டேமி பியோமோன்டும் முதன் இன்னிங்ஸை தொடங்கினர்.. லாரன் வின்பீல்ட்டு 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பூஜா வஸ்ட்ராகரின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் தனியா பாட்டியாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து டாமியுடன் கேப்டன் ஹீதர் நைட் இணைந்தார். உணவு இடைவெளை வரை இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் 13 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை மோதியுள்ளன. இதில் இரண்டு போட்டியில் இ்ந்தியாவும், ஒரு போட்டியில் இங்கிலாந்தும் வெற்றிப் பெற்றன. 10 ஆட்டங்கள் டிரா ஆனது. இங்கிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிராக இந்திய அணி இதுவரை டெஸ்டில் தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.







