இஸ்ரேல் தாக்குதலால் உலக நரகமான காஸா – சிகிச்சை கிடைக்காமல் உயிரிழக்கும் பொதுமக்கள்!

இஸ்ரேல் ராணுவம் காசாவின் வடக்குப் பகுதியிலிருந்து தெற்குப் பகுதி நோக்கி வெளியேற வேண்டும் என பாலஸ்தீன மக்களுக்கு 3 மணி நேரம் கெடு விதித்த நிலையில், மக்கள் மொத்தமாக வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ்…

இஸ்ரேல் ராணுவம் காசாவின் வடக்குப் பகுதியிலிருந்து தெற்குப் பகுதி நோக்கி வெளியேற வேண்டும் என பாலஸ்தீன மக்களுக்கு 3 மணி நேரம் கெடு விதித்த நிலையில், மக்கள் மொத்தமாக வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.  இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக் குழுவினரை முற்றிலும் அழிக்கும் நோக்கில் தரைவழித் தாக்குதலுக்குத் தயாராகி வருவதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது. மேலும், காசாவின் வடக்குப் பகுதியில் வசிக்கும் 10 லட்சம் மக்கள் தெற்குப் பகுதிக்கு வெளியேற 24 மணி நேரம் கெடு விதித்து கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இந்தக் கெடு முடிந்துவிட்ட நிலையில், எச்சரிக்கை அறிவிப்பை விளக்கும் ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை வான்வழியாக காசா மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று வீசியது. மேலும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் எச்சரிக்கை குறித்து மீண்டும் நினைவூட்டியது. காசாவின் தெற்குப் பகுதியிலும் இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதால், அங்கு சென்றாலும் பாதுகாப்பு நிச்சயம் இல்லை என்ற நிலையில் காசா மக்கள் பரிதவித்து வருகின்றனர்.

இதையடுத்து, வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்வதற்கான ஒரே சாலையில் நேற்று காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை தாக்குதல் நடத்தப்படாது எனவும், அந்த நேரத்தில் மக்கள் வெளியேற வேண்டும் எனவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

ஆனால் குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளின் தட்டுப்பாட்டுக்கு இடையே தெற்குப் பகுதி நோக்கி மக்கள் வெளியேறி வந்தாலும் லட்சக்கணக்கான மக்கள் ஒட்டுமொத்தமாக வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் காயமடைந்துள்ள ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெறுவதற்காகவும், பாதுகாப்புக்காகவும் காசாவில் உள்ள மருத்துவமனைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.எரிபொருளின்றி காசாவில் அமைந்துள்ள ஒரே மின் நிலையம் ஏற்கெனவே மூடப்பட்டு விட்டது. எனவே, இன்னும் 2 நாள்களில் மின்-ஜெனரேட்டர்களுக்கான எரிபொருளும் தீரும் சூழலில், காசா மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் ஆயிரக்கணக்கான நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. தெற்கு நகரமான கான் யூனிஸில் அமைந்துள்ள நசீர் மருத்துவமனையில் பெரும்பாலும் குழந்தைகள் உள்பட பலத்த காயமடைந்த நூற்றுக்கணக்கான நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த மருத்துவமனையில் எரிபொருள் தீா்ந்துவிடும் சூழல் நிலவுகிறது. எரிபொருள் தீரும் நிலையில், மருத்துவமனை மொத்தமாக முடங்கி அனைவரும் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக அங்கு பணிபுரியும் மருத்துவர் தெரிவித்தார். காசா சிட்டியில் உள்ள ஷிஃபா மருத்துவமனையில் உயிரிழந்தவா்களின் உடல்கள் பிணவறை முழுவதுமாக நிரம்பியதால் உறவினர்களின் இறுதி அஞ்சலியின்றி 100 உடல்கள் ஒரே இடத்தில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மக்களை தெற்குப் பகுதிக்கு வெளியேற உத்தரவிட்டு கெடு விதித்திருப்பது, வடக்குப் பகுதியிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 2,000 நோயாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு சமமானது என உலக சுகாதார மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. பிராந்திய மோதல் தொடங்குவதைத் தடுக்கும் நோக்கில் 6 அரபு நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் இஸ்ரேலுக்கு இன்று பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் நெதன்யாகுவுடன் போா்நிறுத்த பேச்சுவார்த்தையில் அவர் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.