சிந்தாதிரிப்பேட்டையில் 3 கடைகளின் பூட்டை உடைத்து செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களைத் திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.
சிந்தாதிரிப்பேட்டை, வாலஸ் சாலையில் அடுத்துடுத்துள்ள 3 செல்போன் கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு, 100க்கும் மேற்பட்ட செல்போன்களை செப்டம்பர் 1ஆம் தேதி மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து, F-1 சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் 3 வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. காவல் குழுவினர் சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தனர்.
அதைத்தொடர்ந்து, பாலவாக்கத்தைச் சேர்ந்த கணேசன் மகன் முருகன் (19) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், 2 இளஞ்சிறார்களும் பிடிபட்டனர்.
இதையடுத்து, அவர்களிடமிருந்து 63 செல்போன்கள், 5 ஸ்மார்ட் வாட்ச், 1 இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
12 மணி நேரத்தில் குற்றவாளிகளைப் பிடித்து, களவு சொத்துக்களை மீட்ட காவல் குழுவினரை காவல் ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் பாராட்டினர்.
-ம.பவித்ரா








