இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20 போட்டி நாக்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்ய குமார் யாதவ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்துள்ளது. நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா 26 பந்துகளுக்கு 44 ரன்களும் கேப்டன் 27 பந்துகளுக்கு 47 ரன்களும் விளாசினர். இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து இந்திய அணி 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது.
இதில் தொடக்க வீரர்கள் சஞ்சு சாம்சன் 6 ரன்னிலும், அபிஷேக் (0) ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன், கேப்டன் சூர்யகுமார் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கிஷன் 32 பந்துகளில் 76 ரன்கள் விளாசி அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஷிவம் துபே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் இந்திய அணி 15.2 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது.
இதன் மூலம் நியூசிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் 37 பந்துகளில் 82 ரன்களும், ஷிவம் துபே 18 பந்துகளில் 36 ரன்களும் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வழிவகுத்தனர். நியூசிலாந்து தரப்பில் அந்த அணியின் மேட் ஹெண்ட்ரி, ஜாக்கப், இஷ் ஷோதி தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.







