நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை துணைத் தலைவராக உள்ள மூத்த உறுப்பினர் ஹரிவன்ஸ் பதவி காலம் நிறைவடைவதை தொடர்ந்து அவருக்கான பிரியாவிடை வழங்கும் நிகழ்ச்சி மாநிலங்களவையில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே உள்ளிட்ட பல்வேறு மூத்த தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர். அந்த வகையில், மாநிலங்களவை கூட்டத் தொடரில் இன்று பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பிரியாவிடை நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது, “ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இது போன்ற நடைபெறும் நிகழ்வுகள் இங்குள்ள உறுப்பினர்கள் அனைவரையும் உணர்வு பூர்வ தருணங்களுக்கு கொண்டு செல்லும் நாளாக அமைகிறது என்றார். இந்த நாடாளுமன்றத்தில் பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்படுகிறது. அவை ஒவ்வொன்றும் முக்கியத்துவம் வாய்ந்த மிகுந்த அர்த்தங்கள் கொண்டவை, ஆனால் இது பிரியாவிடை அளிக்கும் தருணம் வரும்போது தான் நம்மோடு பயணத்தை தொடர்ந்த சக உறுப்பினர்கள் மீதுள்ள மரியாதையை நாம் வெளிப்படுத்த முடிகிறது.
மாநிலங்களவை என்பது விலைமதிப்பற்ற அனுபவமும் ஞானமும் நிறைந்த ஓர் இடம், ‘அரசியலுக்கு எப்போதும் முற்றுப்புள்ளி’ என்பதை கிடையாது! பதவிகளில் இருந்து விலகினாலும் பொது சேவைக்கான பணிகள் தொடர வேண்டும். மூத்த தலைவர்களிடமிருந்து இளம் தலைவர்கள் அதிகம் கற்றுக் கொள்ள வேண்டும், குறிப்பாக மல்லிகார்ஜுன் கார்கே, சரத்பவார் உள்ளிட்ட தலைவர்களிடமிருந்து உத்வேகம் மற்றும் வழிகாட்டுதல்களை இளம் உறுப்பினர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இன்று மாநிலங்களவையிலிருந்து விடைபெறும் சில உறுப்பினர்கள் மீண்டும் இதே அவைக்கு திரும்பவோம் என்ற நம்பிக்கையுடனே செல்கின்றனர். ஆனால் சிலர் இந்த அவையில் மூலம் கிடைத்த அனுபவங்களோடு விடைபெற்று செல்கிறார்கள்! அவர்கள் சமுதாயத்திற்கும் பொது வாழ்விற்கும் அர்த்தமுள்ள வகையில் தேவையான பங்களிப்பை தொடர வேண்டும். இன்று விடைபெறும் அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஸ் அவரது பொறுப்புகளை நீண்ட காலத்திற்கு இந்த அவையில் நிறைவேற்றும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது என்று தெரிவித்துள்ளார்.







