மதுராந்தகம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்ற சத்தியபாமா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனையடுத்து அந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில், 5 தொகுதிகளின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது. அதன்படி அக். 6 ஆம் தேதி 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த செப்.9-ஆம் தேதி தொடங்கியது. இதனிடையே தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் தலைமையில் தவெக, விசிக, காங்கிரஸ், ஐயூஎம்எல், மதிமுக ஆகிய கட்சிகள் அடங்கிய மதச்சார்பற்ற சமுயுகநீதி வெற்றிக் கூட்டணி உறுவாக்கப்பட்டது. இந்த நிலையில் திமுக மற்றும் தவெக கூட்டணிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அதன்படி திமுக சார்பில் மதுராந்தகத்தில் பரந்தாமன் மற்றும் தாராபுரத்தில் சுகன்யா ஆக்யோர் போட்டியிடுகின்றனர். அதேபோல தவெக கூட்டணி சார்பில் ஏற்கனவே அந்தத் தொகுதிகளில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரத்தில் சத்தியபாமா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் தவெகவுக்கு ஆதரவளித்த காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் தவெக கூட்டணியில் இணைந்த நிலையில், வெளியில் இருந்து ஆதரவளித்துள்ள இடதுசாரி கட்சிகளான சிபிஐ மற்றும் சிபிஐஎம் கட்சிகள் இடைத்தேர்தலில் தங்களது நிலைபாடு குறித்து இதுவரை அறிவிக்கவில்லை. இந்த இடைத்தேர்தலில் இடதுசாரிகள் யாருக்கு ஆதரவளிப்பார்கள் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் இடைத்தேர்தல் நிலைபாடு குறித்து நாளை அறிவிக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ இன்று இணைய வழையில் சிபிஎம் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இடைத்தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநில குழுவை கூட்டி, முடிவை எடுக்க திட்டமிட்டுள்ளோம். நாளை காலை அவசர மாநில குழு கூட்டம் திருச்சியில் நடக்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் முடிவு என்பதால், மாநில குழு கூட்டத்தில் விவாதிக்க இருக்கிறோம். நாளை மதியம் 2 மணிக்கு முடிவு அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.




