நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை – 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!

தேசியத் தேர்வுகள் முகமை (NTA) நீட் இளநிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் (UG) 2026 தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வு முகமை (NTA) நேற்று வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கான மருத்துவக் கலந்தாய்வு மற்றும் சேர்க்கை நடைமுறைகள் திட்டமிட்டபடி காலதாமதமின்றித் தொடங்குவதற்காக, இந்த முடிவுகள் உரிய நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில், 11 லட்சத்து 21 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்புகளுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

கடந்த ஜூன் 21-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில், 11.21 லட்சம் மாணவர்கள் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக, தேர்ச்சி பெற்றவர்களில் 58 சதவீதத்திற்கும் அதிகமானோர் மாணவிகள் ஆவர். அதாவது, தேர்வு எழுதிய மாணவிகளில் 56.8 சதவீதத்தினரும், மாணவர்களில் 55.1 சதவீதத்தினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தங்களது மதிப்பெண் அட்டைகளை neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பஞ்சாப்பைச் சேர்ந்த ஆர்யன் குப்தா மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த பான்ஷுல் பன்சால் ஆகிய இருவரும் 720-க்கு 715 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளனர். 138 மாணவர்கள் 690-க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இவர்களில் 93 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்களது முதல் முயற்சியிலேயே இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர். 700-க்கும் மேல் 19 மாணவர்களும், 600-க்கும் மேல் 10,160 மாணவர்களும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

நாட்டின் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களும் இத்தேர்வில் தகுதி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக உத்திரப் பிரதேசத்தில் இருந்து 1.7 லட்சம் மாணவர்களும், லட்சத்தீவில் இருந்து 43 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு முற்றிலும் புதிய தொழில்நுட்ப உத்திகள் மூலம், இறுதி விடைக்குறிப்பு மற்றும் தேர்வு முடிவுகள் ஒரே நாளில், அதாவது இன்று ஜூலை 16-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளன. மருத்துவக் கலந்தாய்வு தொடர்பான தகவல்களுக்கு மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்களை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், போலி அழைப்புகள் மற்றும் மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம் என்றும் தேசிய தேர்வு முகமை எச்சரித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.