பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று, 2024, மீண்டும் பாஜக, மீண்டும் மோடி என பதிவிட்டு அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
புதிய விமான நிலைய முனையம் திறப்பு, சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவை
தொடக்க நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர்
மோடி இன்று சென்னை வர உள்ளார். இதனையொட்டி, சென்னை மாநகரம் முழுவதும்
5 அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து சேவை மாற்றப்பட்டுள்ளது. சென்னை விமான நிலைய பகுதிகளில் 7 அடுக்கு பாதுகாப்பு பணிகளில் போலீசார் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர்.
பிரதமர் சென்னை வருவதையொட்டி பாஜகவினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சென்னை, பல்லவன் சாலை மற்றும் சிவானந்தா சாலை வழியாக
பிரதமர் மோடி செல்ல உள்ள நிலையில் அப்பகுதிகளில் பேனர்கள், வாழைமரம் அமைப்பது, தோரணம் கட்டுவது உள்ளிட்ட பணிகளில் பாஜகவினர் ஈடுபட்டனர்.
2024 – மீண்டும் பாஜக, மீண்டும் மோடி! #Vanakkam_Modi pic.twitter.com/ZePSXsUiWp
— K.Annamalai (@annamalai_k) April 8, 2023
மேலும், பிரதமரை வரவேற்க பரதநாட்டியம், கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் 2024- மீண்டும் பாஜக, மீண்டும் மோடி என எழுதியுள்ளார். அந்த வீடியோவில், பாஜக கடந்த 9 ஆண்டுகளில் செய்த சாதனைகள், மக்கள் நல திட்டங்கள், உள்கட்டமைப்புகள், காசி தமிழ் சங்கமம், ஜி20 மாநாடு தலைமை பொறுப்பு உள்ளிட்ட இந்தியாவின் சாதனைகளை குறித்து காண்பிக்கப்படுகிறது.







