பர்கூர் மலைப்பாதையில் வாகனங்களை வழிமறித்த ஒற்றை ஆண் யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் யானை, கரடி, புலி, சிறுத்தை, மான் என ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. கோடைகாலம் என்பதால் அடிக்கடி வனப்பகுதியை விட்டு விலங்குகள் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் உலா வருகின்றன.
இந்த நிலையில் தாமரைக்கரை பகுதியிலிருந்து தேவர் மலை கிராமத்திற்கு செல்லும் வழியில் வனப்பகுதியை விட்டு வெளியே வந்த ஒற்றை ஆண் யானை நீண்ட நேரமாக சாலை ஓரத்தில் உள்ள மூங்கில் துார்களை உடைத்து சாப்பிடத் தொடங்கியது.
அப்போது வாகன ஓட்டிகள் ஹாரன் ஒலி எழுப்பி யானையை வனப்பகுதிக்கு விரட்டி அடித்தனர். யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதேபோல் அடிக்கடி யானைகள் கிராமத்திற்குள் தண்ணீர்காக நள்ளிரவில் வருவதால் வனப்பகுதியில் உள்ள அகழிகளை ஆழப்படுத்த வேண்டும் எனவும், வனப்பகுதிக்குள் உள்ள குட்டைகளில் உடனடியாக வனத்துறையினர் நீர் நிரப்பி வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் வன ஆர்வலர்களும் மலை கிராம மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
—அனகா காளமேகன்







