திருப்பூரில் மீன் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன 200 கிலோ மீன்கள் உள்ளிட்ட பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பணப்பாளையம் பகுதியில் மீன்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று உள்ளது. இந்த மீன் கடைக்கு அருகில் அரசு மதுபான கடை ஒன்றும் உள்ளது. தினமும் இந்த மீன் கடையில் கடல் மீன்கள் மற்றும் ஆற்று மீன்கள் அதிகளவில்
விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் மது அருந்துவோர் விரும்பி உண்ணும் பொரித்த மீன்கள் மாலை நேரங்களில் இங்கு விற்கப்பட்டு வந்தது. மதுபானக் கடை அருகில் இருப்பதாலும் மது அருந்துவோரின் வருகையாலும் பொரித்த மீன்கள் விற்பனை நாள்தோறும் படுஜோராக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த மீன் கடையில் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுவதாக திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் விஜயலலிதா அம்பிகை தலைமையில், பல்லடம் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் கேசவராஜ் மற்றும் குழுவினர்கள் திடீரென மீன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மீன்களை பொறிப்பதற்கு பலமுறை பயன்படுத்திய தரமற்ற எண்ணெய்களைப் பயன்படுத்தியதும், கெட்டுப்போன மீன்களை ஐஸ் பெட்டிக்குள் பதுக்கி வைத்து பயன்படுத்தியதும், ஆய்வின்போது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அங்கு ஃபிரீசர் பாக்ஸில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ கெட்டுப் போன மீன்கள், தரமற்ற ஆயில், மசாலா பொடி முதலியவற்றை பறிமுதல் செய்து அனைத்தையும் ஆசிட் ஊற்றி அழித்தனர். பல்லடம் பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மீன் கடைகளையும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
- ஜெனி









