ஆரோவில்லில் உள்ள ஒரு பிரெஞ்சு நாட்டவர் குடியிருப்பில் இருந்து இருபது பழமையான கலைப்பொருட்களை சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆரோ ரச்சனா என்ற கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் தமிழகத்தைச் சேர்ந்த திருடப்பட்ட பழங்கால கலைப்பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிந்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டிடம் இருந்து அந்த வளாகத்தை சோதனை செய்வதற்கான உத்தரவை அதிகாரிகள் பெற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் நேற்று ஆரோ ரச்சனாவை சோதனையிட்டபோது, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர், பிரான்ஸ் நாட்டுக்கு கடத்த முயன்ற இருபது பழங்காலப் பொருட்கள் தொடர்பான ஆவணங்கள் அந்த வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. சோதனையின் போது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் 13 கல் சிலைகள், 4 உலோக சிலைகள், 1 மர கலைப்பொருட்கள், 1 ஓவியம் மற்றும் 1 டெரகோட்டா உள்ளிட்ட 20 கலைப்பொருட்களை கைப்பற்றினர்.
உலோக விநாயகர் சிலை, கிருஷ்ணன் ஓவியம், டொமினிக் கார்டனில் இருந்து நடனமாடும் அப்சரா மரம், பெரிய பிள்ளையார், நடுத்தர பிள்ளையார், சிறிய பிள்ளையார், பெரிய புத்தர் சிலை, நடனம் ஆடும் அப்சரா சிலை, விஷ்ணு கல் சிலை, பார்வதி கல் சிலை, அய்யப்பன் கல் சிலை சிறியது, ஐயப்பன் கல் சிலை பெரியது, நந்தி கல் சிலை, கையில் கத்தியுடன் கல் சிலை, டெரகோட்டா புத்தர் சிலை (தலை மட்டும்), உறையுடன் கூடிய வெண்கல சொம்பு, வெண்கல சொம்பு, மயில் விளக்கு, அனுமன் சிலை, முருகன் சிலை ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றவரின் முகவரி இருந்தது. மேலும் விசாரணையில் பிரெஞ்சு நாட்டவர் இந்த கலைப்பொருட்களை பிரான்சுக்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து பழங்கால பொருட்களை பறிமுதல் செய்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பிரெஞ்சு நாட்டவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-ம.பவித்ரா