“பட்டா இடத்தை காணோம்…” கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த நபர்!

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு படத்தில் கிணற்றைக் காணோம் என காவல்துறையில் புகார் அளித்து சிரிக்க வைத்திருப்பார் இந்த நகைச்சுவையை பார்த்து வயிறு குலுங்க சிரிக்காதவர்களே இருக்க முடியாது. அதே போல நடிகர்…

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு படத்தில் கிணற்றைக் காணோம் என
காவல்துறையில் புகார் அளித்து சிரிக்க வைத்திருப்பார் இந்த நகைச்சுவையை
பார்த்து வயிறு குலுங்க சிரிக்காதவர்களே இருக்க முடியாது.

அதே போல நடிகர் வடிவேல் பிறந்த நாளான இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்தில் அரை மொட்டை அடித்துகொண்டு, பட்டை நாமம் போட்டுகிட்டு ஒருவர் அரசு வழங்கிய பட்டா இடத்தை காணோம் என நூதன முறையில் புகார் அளித்து அதிர
வைத்துள்ளார்.

தமிழகத்தில் திரைப்படத்தில் தனக்கென காமெடியில் ஒரு முத்திரை பதித்து
கொடிகட்டி பறந்தவர் நடிகர் வடிவேல். இவர் பிறந்தநாள் இன்று கொண்டாடி வரும்
நிலையில், நடிகர் வடிவேலின் காமெடிகளை நெட்டிசன்கள் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களிலும், முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களிலும் அவரது  காமெடியை பதிவு செய்து கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் அவருடைய காமெடியில் கிணற்றைக் காணோம் என காவல் நிலையத்தில் புகார் அளித்து அதனைக் கண்டுபிடித்து தர வேண்டும் என போலீசாரை வறுத்தெடுப்பார். அந்த காமெடியை பார்த்து சிரிக்காதவர்களே இருக்க முடியாது.

அதேபோன்று இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர குறை
தீர்ப்பு நாள் கூட்டத்திற்கு சங்கராபுரம் அருகே கொசப்பாடி கிராமத்தை சேர்ந்த
சுப்பிரமணி என்ற ஒருவர் அரை மொட்டை அடித்து, பட்டை நாமம் போட்டு கொண்டு,
கையில் பதாகையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் ஊரில் அரசு வழங்கிய
பட்டா இடத்தை காணோம் என புகார் அளித்து அதிகாரிகளை அதிர வைத்துள்ளார்.

அவர் அளித்த மனுவில், “கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள
கொசப்பாடி, நத்தகுளம் கிழக்குத் தெருவில் வசித்து வரும் சுப்பிரமணி என்ற நான்
அந்த கொசப்பாடி கிராம எல்லையில் 27.04.1998 அன்று 85 பயனாளிகளுக்கு 3 செண்டு
விகிதம் பட்டா வழங்கப்பட்டது. இந்த நிலையில் இதில் தெரு மற்றும் சாலைக்கு 1.27
செண்ட இடமும், சமுதாய நன்மைக்கு 0.63 செண்ட இடமும், எதிர்கால நன்மைக்கு
0.24 செண்ட இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனிடையே வருவாய்த் துறை ஆவணம் வரைபடத்தில் இந்த இடம் உள்ளது. ஆனால் நேரில் சென்று பார்க்கும்போது சமுதாய நன்மைக்கு ஒதுக்கப்பட்ட இடமும், எதிர்கால நன்மைக்கு ஒதுக்கப்பட்ட இடமும் காணவில்லை. அதனை வருவாய்த் துறை அதிகாரிகள் உடனடியாக உரிய முறையில் ஆய்வு செய்து காணாமல் போன இடத்தை கண்டுபிடித்து தர வேண்டும் என திரைப்படப் பாணியில் புகார் அளித்து உள்ளார்.

இந்த மனுவை மாவட்ட ஆட்சியர் அருகே அமர்ந்திருந்த மாவட்ட ஆட்சியரின் நேர்முக
உதவியாளர் சுரேஷிடம் ஒப்படைத்தார். அதைப் பெற்ற அதிகாரி சில நிமிடம் என்ன
செய்வது என்றே தெரியாமல் கிறுகிறுவென தலைசுற்றி மனுவை படித்துவிட்டு
விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து, மனு அளித்த
சுப்பிரமணி அவருக்கு கும்பிடு போட்டுவிட்டு விடை பெற்றார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடிவேல் திரைப்பட பாணியில்
ஒருவர் அரசு வழங்கிய பட்டா இடத்தை காணோம் என புகார் அளித்துள்ளது பரபரப்பு
ஏற்படுத்தி அதிகாரிகளை அதிர வைத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.