திருவாரூரில் குழந்தை திருமணம் நடத்த அனுமதித்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சாரு ஸ்ரீ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குழந்தை திருமணம் தடைச்சட்டம் குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடத்துவது சட்டப்படி குற்றமாகும். இது போன்ற திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். திருமண மண்டபங்கள் நடத்தும் உரிமையாளர்கள், திருமணம் நடத்த வருவோர்களிடம் மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரின் வயதை நிரூபிக்க சான்று அவசியம் பெற வேண்டும்.
மேலும்,18 வயதுக்கு குறைவாக உள்ள பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடப்பதாக
இருந்தால், அது குறித்து தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல்
தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் தெரிவிக்காமல் திருமணம் நடப்பதாக தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட திருமண மண்டப உரிமையாளர் மற்றும் குழந்தை திருமணம் நடத்த, ஏற்பாடு செய்தவர்கள் மீது குழந்தை திருமண தடைச் சட்டம் 2006 இன் படி, குழந்தை திருமணம் நடைபெற உடந்தையாக இருந்ததாக கருதப்பட்டு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதைப்போல், கோயில்களிலும் 18 வயது நிரம்பிய பின்னரே திருமணம் நடத்த அனுமதிக்க வேண்டும். மேலும், ஊராட்சி தலைவர்களுக்கு குழந்தை திருமணம் நடைபெறுவது தெரிய வந்தால், உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும். பொதுமக்கள், இது பற்றிய புகார்களை குழந்தைகள் உதவி மையம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 என்ற எண்ணிற்கும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் 04366 290445 ஆகிய தொலைபேசி எண்ணிற்கு , புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார்.