வங்கதேசத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வங்கதேசத்தின் கிஷோர்கஞ்ச் மாவட்டம் பைரப் ரயில் நிலையத்தில் இருந்து டாக்கா நோக்கி புறப்பட்ட இகரொசிந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், வேறு தண்டவாளத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், ரயில் முழுமையாக மாறுவதற்கு முன்பு அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில், பயணிகள் ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. சம்பவம் நடைபெற்ற இடத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படியுங்கள் : ‘லியோ’ படம் பார்க்க நேரமே கிடைக்கல..! – கோவையில் வானதி சீனிவாசன் பேட்டி
இந்த விபத்து குறித்து பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், “காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இன்னும் சிலர் ரயில் பெட்டிகளின் அடியில் சிக்கிக் கொண்டுள்ளனர். சேதமடைந்த ரயில் பெட்டிகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்தை அடுத்து, டாக்கா-சிட்டகாங் மற்றும் சில்ஹெட்-கிஷோர்கஞ்ச் ரயில் பாதைகளில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.







