அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு ஜூன் 27ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை வரும் 27-ம் தேதி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது, வேலைவாய்ப்புப் பெற்றுத் தர…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை வரும் 27-ம் தேதி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது, வேலைவாய்ப்புப் பெற்றுத் தர பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கடந்த 14-ஆம் தேதி கைது செய்தனர்.

அப்போது, நெஞ்சு வலி காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு இதயக் குழாய்களில் 3 அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் நேற்று இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் உள்ள காலத்தை காவலாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தனி மனுவும் அமலாக்கத்துறை தாக்கல் செய்யப்பட்டது.  ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு உகந்ததல்ல என்று அமலாக்கத்துறை தெரிவித்த நிலையில், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை மேற்கோள்காட்டி செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞரும், திமுக எம்பியுமான என்.ஆர்.இளங்கோ வாதங்களை முன் வைத்தார்.

குறிப்பாக கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்காததால் ஆள்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என்றும், அமலாக்கத்துறைக்கு காவலில் எடுத்து விசாரிக்கும் அதிகாரமே இல்லை என்றும் என்.ஆர்.இளங்கோ தெரிவித்தார்.

அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீண்ட நேரம் காரசார விவாதம் நடத்திய நிலையில், பதில் வாதத்துக்காக விசாரணையை தள்ளி வைக்க அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்ததை அடுத்து ஜூன் 27-ஆம் தேதிக்கு வழக்கு  விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.