12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெறாதவர்களுக்கு துணைத்தேர்வு ஜூன் 19ல் தொடக்கம்..!

தமிழகத்தில் 12ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூன் 19ம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கியது. இந்த கல்வியாண்டில் 8.17 லட்சம் மாணவ…

தமிழகத்தில் 12ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூன் 19ம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கியது. இந்த கல்வியாண்டில் 8.17 லட்சம் மாணவ மாணவிகள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதி உள்ளனர். கடந்த மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை வரை நடைபெற்ற தேர்வு தாள்கள் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை திருத்தப்பட்டன. இதனையடுத்து, தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இருந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டார்.

இதில், தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.03சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 91.45 சதவீதமும் , மாணவிகள் 96.38 சதவீதமும் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இந்த ஆண்டும் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் அதாவது 4.93 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் தமிழகத்தில் அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இதனை தொடர்ந்து, திருப்பூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. அதேபோல் தமிழகத்தில் 326 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.

இந்த நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 19-ந் தேதி துணைத்தேர்வு தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்ச்சி பெறாத 47 ஆயிரத்து 934 மாணவர்களும் துணைத்தேர்வுக்கு விண்ணபித்து, தவறாது பங்கேற்று தேர்வினை எழுதுமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருக்கிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.