டெல்லியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் ஒருவர், 13 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
டெல்லியின் சுல்தான்புரி பகுதியில் கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 20 வயது இளம்பெண் ஒருவர், 13 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த கோர விபத்து குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், விபத்து தொடர்பாக குடிபோதையில் இருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
கொடூரமான முறையில் இளம்பெண் உயிரிழந்தது குறித்து நியாயமான விசாரணை நடத்த டெல்லி மாநகர காவல் ஆணையருக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. பிரேத பரிசோதனை நடத்தி இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பதை கண்டறிய வேண்டும் எனவும் மகளிர் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த விபத்து குறித்து காவல் துறை அதிகாரி ஹரேந்திர சிங் கூறுகையில், இந்த விபத்து தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இந்த விபத்து நடந்த போது காரில் இருந்த 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
மேலும் உயிரிழந்த இளம்பெண்ணின் தாயார் கூறுகையில், எனது மகள் திருமண நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கும் வேலை செய்து வருகிறார். சம்பவதன்று இரவு 9 மணியளவில் நான் எனது மகளுடன் பேசினேன். அப்போது அதிகாலை 3-4 மணிக்குள் வீட்டிற்கு வருவதாக தெரிவித்தார். இந்த விபத்து தொடர்பாக இன்றைக்கு அதிகாலையில் காவல்துறையினரிடம் இருந்த அழைப்பு வந்தது.
எனது சகோதரர் காவல்நிலையத்திற்கு சென்ற போது தான் எனது மகள் உயிரிழந்த தகவல் எங்களுக்கு தெரிந்தது. எங்கள் குடும்பத்தில் வேலைக்கு செல்லும் ஒரே நபர் எனது மகள் தான். வேலைக்கு செல்லும் போது அவள் ஆடைகள் அணிந்திருந்தாள். ஆனால் விபத்தில் ஒரு பொட்டு துணி கூட எனது மகள் உடலில் இல்லை. என்ன விதமான விபத்து இது என்று கூறி கதறி கதறி அழுதார். எனது மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கலாம் என்று கூறினார்.
மேலும், இளம்பெண்ணின் தாயார் தெரிவித்துள்ள பாலியல் வன்கொடுமை புகார் உண்மையாக இருக்கும்பட்சத்தில் முதல் தகவல் அறிக்கையில் தகுந்த பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.







