மசினகுடி சிங்காரா T23 புலியை தேடி 12-வது நாளாக மீண்டும் வனப் பகுதிக்குள் பழங்குடியின வேட்டை தடுப்பு காவலர்களுடன் தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலைக்குள் புலியை பிடிக்க உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் 12 வயது மதிக்கத்தக்க T23 என பெயரிடப்பட்ட ஆண் புலி ஒன்று, கடந்த சில வாரங்களாக கால்நடைகளை வேட்டையாடி வந்தது. தற்போது வரை 4 பேரை புலி கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பு கருதி மனிதர்களை தாக்கி கொன்ற T23 புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்தனர். 12-வது நாளாக இன்று 5 கால்நடை மருத்துவ குழு, மூன்று மோப்ப நாய்கள், 50க்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் உதவியுடன் புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், டி23 புலி பகல் நேரங்களில் அடர்ந்த செடிக்குள் மறைந்திருந்து, இரவு நேரங்களில் வெளியேறி வருவதால் புலியை பிடிப்பது வனத்துறைக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.
அதிவேக ட்ரோன் மூலம் புலி வேறு பகுதிக்கு சென்று உள்ளதா என்பதை வேட்டை தடுப்பு காவலர்கள் கண்டறிந்து வருகின்றனர். இன்று காலை புலி நடமாடிய பகுதியில் கால்தடங்கள் இருப்பதால் புலியை பிடிப்பதற்காக 2 மாடுகள் மற்றும் ஒரு கன்று குட்டியையும் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று மூன்று இடங்களில் அதனை கட்டி வைக்க முடிவு வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். மேலும் இன்று மாலைக்குள் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







