உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் திட்டமிட்டே வாகனம் ஏற்றிக் கொல்லப்பட்டதாக காங்கிரஸ் எம்.பி, ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூர் கெரி பகுதியில் அரசு விழா ஒன்றுக்கு, துணை முதலமைச்சர் கேசவ் மவுரியா, மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள், அவர்களுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டினர்.
அப்போது மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ரா காரில் வந்ததாகவும், அவருக்குப் பாதுகாப்பாக வந்த தொண்டா்களின் காா் வேண்டுமென்றே, போராடும் விவசாயிகள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் நான்கு விவசாயிகள் உயிரிழந்தனா். கோபமடைந்த விவசாயிகள், தாக்கியதில் 4 பாஜகவினர் கொல்லப் பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே விவசாயிகள் மீது காா் வேண்டுமென்றே மோதுவதை உறுதிபடுத்தும் வகையில், விடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து லகீம்பூருக்கு இன்று செல்ல இருப்பதாக ராகுல் காந்தி கூறினார். அவருக்கு உத்தரப் பிரதேச அரசு அனுமதி மறுத்தது.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, உத்தரப்பிரதேச அரசு விவசாயிகளை அவமதிப்பதாகவும், விவசாயிகள் திட்டமிட்டே வாகனம் ஏற்றிக் கொலை செய்யப்பட்டதாகவும் அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்றும் குற்றஞ்சாட்டினார். முன்பு ஜனநாயக ஆட்சி நடைபெற்று வந்த இந்தியா வில் தற்போது சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது என்ற ராகுல் காந்தி, லக்னோ நகரில் இருந்த பிரதமர் மோடி, வன்முறை நடந்த லகிம்பூருக்கு ஏன் செல்லவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
144 தடை உத்தரவு போடப்பட்டாலும், 3 பேர் செல்ல முடியும் என குறிப்பிட்ட ராகுல் காந்தி, லகிம்பூர் பகுதிக்குள் செல்ல முயற்சிப்போம் எனவும் கைது நடவடிக்கைகள் மற்றும் காவல்துறையினரின் அராஜக நடவடிக்கைகளுக்கு பயப்படமாட்டோம் என்றும், பாதிக்கப் பட்ட விவசாயிகளின் குடும்பங்களை சந்திப்பதே, தனது இலக்கு என்றும் அவர் தெரிவித் தார்.









