ஆரணியை அடுத்த காளசமுத்திரம் பகுதியில் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 100 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தீவிர கள்ளச்சாராய வேட்டையில் மாவட்ட காவல்துறை சார்பில் போலீசார் அதிரடி நடவடிக்கையால் கள்ளச்சாராயம் அறவே ஒழிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, கிராமப்புறங்களில் அரசு மதுபான கடைகளிலிருந்து மது பாட்டில்களை ஒட்டு மொத்தமாக வாங்கிச்சென்று அந்தப்பகுதியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதோடு 24 மணி நேரமும் மது பாட்டில்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்,
கண்ணமங்கலம் காவல் நிலைய போலீசார் காளசமுத்திரம், குப்பம், கொளத்தூர் உள்ளிட்ட கிராமப்புறங்களில் தீவிர கள்ளச்சாராயம் மற்றும் மது பாட்டில்கள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது காளசமுத்திரம் கிராமத்தில் குமார் என்ற நபர் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள மார்க்கெட்டில் 24 மணி நேரமும் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், குமார் வீட்டை சோதனை செய்ததில் வீட்டில் மறைத்து வைத்திருந்த 100 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கள்ள விற்பனை செய்த குமாரையும் கைது செய்தனர். மேலும், ஆரணி பகுதியில் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து குண்டாஸ் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவர் என போலீசார் எச்சரித்தனர்.
சௌம்யா.மோ







