பொள்ளாச்சி அருகே 10ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த 16வயதான பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த மார்ச் 21ஆம் தேதி காணாமல் போய்விட்டதாக அவரது உறவினர் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வந்தனர்.
இந்தநிலையில் மாணவியின் உறவினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் காணாமல் போன மாணவி கண்டுபிடித்து தர கிணத்துக்கடவு காவல்துறையினருக்கு உத்தரவிட்டனர்.
இதையடுத்து கிணத்துக்கடவு காவல்துறையினர் தனிப்படை அமைத்து கானாமல் போன மாணவியை தேடினர். அப்போது காணாமல் போன மாணவி கர்நாடகா மாநிலம் மங்களூர் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மாணவி இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தனர்.
பின்னர் அந்த மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி (வயது 23) என்ற வாலிபர் ஆசை வார்த்தை கூறி தன்னை கடத்தி வந்து பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்ட சுப்ரமணி என்ற இளைஞரை நேற்று இரவு கைது செய்த போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் மீட்கபட்ட மாணவியை கோவையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.







