பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து பிரதமர் ஏன் பேசவில்லை; மு.க.ஸ்டாலின் கேள்வி

பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால், அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட 5 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை…

பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால், அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட 5 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து, வடலூர் பேருந்து நிலையத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கியதாக, பிரதமர் மோடி கூறியுள்ளார். ஆனால், மெரினாவில் நடைபெற்ற போராட்டம் காரணமாகவே, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது என தெரிவித்தார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, என பிரதமர் மோடி பேசியுள்ளார். ஆனால், பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து ஏன் பேசவில்லை, என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். மேலும், காவல்துறையில் பெண் அதிகாரிக்கே பாலியல் தொந்தரவு தரப்பட்டது குறித்து, பிரதமர் மோடிக்கு தெரியாதா? என்றும், அவர் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில், மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தான் சிறுவயதிலேயே அரசியலுக்குள் நுழைந்து, படிப்படியாக பதவிகளை பெற்று உழைப்பால் முன்னேறியதாக தெரிவித்தார். தோல்வி பயம் காரணமாகவே எனது மகள் வீட்டில் வருமான வரிசோதனை நடைபெற்றதாகவும், இந்த சோதனை மூலம் திமுகவுக்கு மேலும் 10 தொகுதிகளில் கூடுதல் வெற்றி கிடைக்கும் என ஸ்டாலின் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.