புதுச்சேரியில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் அளித்துள்ளது.
புதுச்சேரியில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் உள்ளிட்ட
மருத்துவம் சார்ந்த படிப்புகளில் 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக
இன்று முதல்வர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை இன்று கூடியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு பள்ளியில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவ கல்வி எட்டாக் கனியாகவிட்டது. இதையடுத்து, தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை அம்மாநில அரசு வழங்கியுள்ளது.
இதேபோல், புதுச்சேரியிலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வந்தது. புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக கோப்பு தயார் செய்து அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அனுப்பப்பட்டது. ஆனால், கிரண்பேடி ஒப்புதல் அளிக்காமல் நிராகரித்தார்.
இந்தநிலையில் புதுச்சேரியில் கடந்த 4 ஆண்டுகளில் மருத்துவ படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே தாண்டாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்க முதல்வருக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பரிந்துரை செய்தார். இதுகுறித்து முடிவு செய்ய இன்று அமைச்சரவை கூடியது. இந்தக் கூட்டத்தில் எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்பில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளித்தாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரியில் 10 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.