இந்தியா-மே.இ.தீ அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் பேட்டை பயன்படுத்தி இஷான் கிஷான் அவரை போலவே போல ஒற்றை கையால் சிக்ஸர் அடித்த விடியோ இணையத்தில் வைரலானது.
இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயின் குயின்ஸ்பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸி 438 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்திய அணி. இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 255 ரன்களில் ஆல்-அவுட்டானது.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி அதிரடியாக ஆடி 24 ஓவர்களுக்கு 181/2 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. அடுத்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 4ம் நாள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்தது. தற்போது மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற 289 ரன்கள் தேவைப்படுகிறது. இதில் இந்தியா சார்பாக 2வது இன்னிங்ஸில் இஷான் கிஷான் 34 பந்துகளில் அரை சதம் அடித்தார்.
இந்த போட்டியில் ரிஷப் பந்ட் பேட்டை பயன்படுத்தி இந்த ஸ்கோரை இஷான் கிஷான் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இஷான் கிஷான் விளையாடிய பேட்டில் RP-17 என குறிப்பிடப்பட்டிருந்தது. RP என்பது ரிஷப் பந்ட் என்பதை குறிக்கும். இந்த ஆட்டத்தில் ரிஷப் பந்த்தினை போல ஒற்றை கையால் சிக்ஸர் அடித்து தனது அரை சதத்தினை நிறைவு செய்தார் இஷான் கிஷான். இந்த விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
போட்டி முடிந்த பிறகு இஷான் கிஷான் கூறியதாவது, “நான் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்தபோது ரிஷப் என்னுடன் இருந்தார். எங்கள் இருவருக்கும் யு-19இல் இருந்தே பழக்கம் உள்ளது. எனக்கும் யாராவது உதவுவார்களா என்றிருந்த வேளையில் ரிஷப் பந்த் எனது பேட்டிங் பொஸிஷன் குறித்து கூறியது மிகவும் உதவியாக இருந்தது.” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.







