பிரபல கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் மனைவிக்கு தமிழ் முறைப்படி வளைகாப்பு நடத்தினார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
பிரபல கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் பேட்டிங் செய்வதுடன் பந்துவீசுவதிலும் பெயர் பெற்றவர். இவர் கடந்த 2015 உலகக் கோப்பை மற்றும் 2021 ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் விளையாடினார். 2010 ஆம் ஆண்டில் பிக் பாஷ் தொடரில் விக்டோரியா அணிக்காக விளையாடத் தொடங்கியபோது அவரது தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது.
20 ஓவர் கிரிக்கெட்டில் தனது வியத்தகு ஷாட்டிற்காக அறியப்பட்ட இவர், 2015 உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிராக 52 பந்துகளில் 102 ரன்கள் பதிவு செய்து அசத்தினார். இது இன்றுவரை இரண்டாவது அதிவேக உலகக் கோப்பை சதமாகும். 2016-ம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக 65 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 145 ரன்கள் எடுத்தார். இது சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் நான்காவது அதிகபட்ச ரன்கள் ஆகும்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி கிரிக்கெட் வீரரான க்ளென் மேக்ஸ்வெல்லின் மனைவி வினி ராமன், ஆஸ்திரேலிய தமிழ் பெண் ஆவார். இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். பிறகு 2022 ஆம் ஆண்டில் இவர்களுக்கு தமிழ் மற்றும் ஆஸ்திரேலிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.
அதன் பிறகு இவர்களுக்கு குழந்தை பிறக்க இருப்பதாக கடந்த மே மாதம் வினி ராமன் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது வினி ராமனுக்கு தமிழ் முறைப்படி வளைகாப்பு நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் அவரது மனைவி வினி ராமனுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.







