மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, விழுப்புரம் ஆசிரியை ஹேமலதா மற்றும் கோவை சிறுமி காயத்ரி ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தார்.
அந்நிய பொருட்களுக்கு மாற்றாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இந்தியர்களின் உழைப்பிலே உருவாக்கம் பெற்ற பொருட்களை பயன்படுத்துவோம் என வரும் புத்தாண்டில் உறுதியேற்போம் என கூறினார். மேலும், குப்பையை ஏற்படுத்தமாட்டோம் என்ற உறுதிப்பாட்டையும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பேசிய அவர் வனவிலங்குகள் பாதுகாப்பில், அரசு மட்டுமின்றி மக்களும் ஆர்வம் காட்டுவதால் சிறுத்தை புலிகளின் எண்ணிக்கை 12,852 ஆக உயர்ந்துள்ளதாக கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு கல்வி கற்று தர புதிய முயற்சியாக, புத்தகத்தின் அத்தனை அத்தியாயங்களையும் அனிமேஷன் வீடியோவாக மாற்றி, தொலைபேசி வாயிலாக மாணவர்களை வழிநடத்திய விழுப்புரத்தைச் சேர்ந்த ஆசிரியை ஹேமலதாவுக்கு புகழாரம் சூட்டினார். மேலும், தனது தந்தையுடன் இணைந்து, பாதிக்கப்பட்ட நாய்க்கு சக்கர நாற்காலி வடிவமைத்து கொடுத்த கோவையைச் சேர்ந்த சிறுமி காயத்ரியின் அன்பும், கருணையும் மனதில் உத்வேகம் அளிப்பதாக பிரதமர் மோடி கூறினார்.







