இந்திய மாணவர்களை மீட்பதற்காக ரஷ்ய அதிபரிடம் பேசி பிரதமர் மோடி 6 மணி நேரம் போரை நிறுத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கனிசமான இடங்களில் வெற்றி பெற்றது. திமுக, அதிமுகவிற்கு பிறகு அநேக இடங்களில் அதிக வாக்குகளையும் பெற்று பாஜக தன்னை முன்னிலை படுத்திக்கொண்டது. இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 56வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்ட காடேஸ்வரா தங்கராஜ் வெற்றி பெற்றதையடுத்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி மற்றும் மாமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.
தாராபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் அதிக
வாக்கு சதவீதத்தில் வெற்றி பெற்றிருப்பதாகவும் வருகிற நாடாளுமன்றத் தேர்தலிலும் தம்ழ்நாட்டில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றும் எனவும் கூறினார்.
உக்ரைன் போர் குறித்து பேசுகையில், இந்திய மாணவர்களை மீட்பதற்காக ரஷ்ய அதிபரிடம் பேசி பிரதமர் மோடி 6 மணி நேரம் போரை நிறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து, உக்ரைன் நாட்டில் சிக்கி உள்ள மாணவர்களை மீட்டு வருவதில் திமுக பொய்யான அரசியல் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.







