தமிழ்நாட்டின் மலைவாசஸ்தலங்களை மற்ற மாநிலத்தவர்களுக்கும் அறிமுகப்படுத்தும் வகையில் பிற மாநில பைக்கர்ஸ்களை அழைத்து ஆண்டுதோறும் சுற்றுலா முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண் இயக்குநர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
சென்னை தீவுத்திடலில் தேசிய சுற்றுலா தினம் மற்றும் போதைக்கு எதிரான “SAY NO TO DRUGS” ஆகியவற்றை வலியுறுத்தி ‘CHENNAI BIKER’S CLUB’ மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இணைந்து, இருசக்கர மோட்டார் வாகன விழிப்புணர்வு பேரணியை நடத்தின.
சென்னை தீவுத் திடலில் தொடங்கி அண்ணா சாலை, கிழக்கு கடற்கரை சாலை வழியாக என 70 கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்று முதலியார் குப்பத்தில் பேரணியை நிறைவு செய்தது. இதில் ஆண், பெண் என 60க்கும் மேற்பட்டோர் தங்களுடைய இருசக்கர மோட்டார் வாகனத்துடன் கலந்து கொண்டனர். இதனை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மேலாண் இயக்குநர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது: போதை பொருள் பயன்படுத்தக் கூடாது என்பதை மக்களிடம் கொண்டு செல்ல அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த பேரணியை நடத்துகிறோம். அதோடு இருசக்கர மோட்டார் வாகன பேரணியை நடத்த தமிழகத்தில் பல மலைப்பகுதிகளை மேம்படுத்தி நடத்த உள்ளோம்.
குறிப்பாக கொல்லி, ஜவ்வாது, ஏற்காடு ஆகிய மலை பகுதிகளை மேம்படுத்த உள்ளோம்.
மலைப்பகுதிகளை மேம்படுத்தி சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆண்டுதோறும் அனைத்து மாநில Biker’s அழைத்து நிகழ்ச்சியை நடத்த உள்ளோம்.
பொதுவாக ஊட்டி,கொடைக்கானுக்கு மட்டுமே அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவதால், நவீன பொழுதுபோக்கு அம்சங்களுடன் அடுத்தடுத்து இந்த மலைப்பகுதிகளை மேமப்படுத்த உள்ளோம். இதை மக்களிடம் கொண்டு சேர்க்க டிஜிட்டல் மார்க்கெட்டிங்கை வலுப்படுத்த உள்ளோம், என்றார்.









