அமைச்சரவையில் இருந்து நாசர் நீக்கப்பட்ட நிலையில், மற்றொரு இஸ்லாமியருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டுமென முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னையை அடுத்த மறைமலைநகரில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வரும் வாரம் சமூக நீதி பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது. இது தொடர்பாக தாம்பரத்தில் அக் கட்சியின் மாநில தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
மறைமலை நகரில் நடைபெறவுள்ள சமூகநீதி பாதுகாப்பு மாநாட்டில் லட்சக்கணக்கானவர்கள் பங்கு பெறுவார்கள். நிர்வாகம் நல்ல முறையில் நடைபெற அமைச்சர்களை நியமிக்கவும், நீக்கவும், அவர்களுக்கான துறைகளை மாற்றவும் முதலமைச்சருக்கு அதிகாரம் உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் திமுக அமைச்சரவையில் உபயதுல்லா, மைதீன்கான் என இரண்டு முஸ்லிம் அமைச்சர்கள் இடம் பெற்றார்கள். அதேபோல தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் செஞ்சி மஸ்தான் , நாசர் ஆகிய இரண்டு பேர் அமைச்சர்களாகப்பட்டனர்.
சமீபத்தில் நாசர் அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கருணாநிதி பாதையில் இரண்டு முஸ்லிம்களை அமைச்சர்களாக நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஜவாஹிருல்லா கேட்டுக் கொண்டார்.







