மதுரவாயல் அருகே பாலியல் உறவுக்கு மறுப்பு தெரிவித்த சிறுவனை, இளைஞர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரவாயல் அடுத்த சீமாத்தம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் ஆலப்பாக்கத்தில் 4 வகுப்பு படித்து வந்தான். அத்துடன் ஆலப்பாக்கத்தில் உள்ள தியேட்டர் முன்பு சுண்டல் வியாபாரம் செய்து வந்தான். நேற்று இரவு வியாபாரம் செய்து விட்டு வருவதாக பெற்றோரிடம் சொல்லிவிட்டு சென்ற சிறுவன் காலை வரையிலும் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மகனை காணவில்லை என மதுரவாயல் போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுவனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், மதுரவாயல் மேம்பாலத்தின் கீழ் காயங்களுடன் தலை மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் காணாமல் போன சிறுவன் சின்னத்தம்பி மயங்கிய நிலையில் இருப்பதாக வந்த தகவலையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயங்களுடன் மயங்கி கிடந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவன் கஞ்சா புகைக்கும் இளைஞர்களுடன் பழக்கம் கொண்டிருந்ததாகவும், போதையில் இருந்த அவர்கள் சிறுவனை பாலியல் உறவுக்கு அழைத்து போது, மறுப்பு தெரிவித்ததால் தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது.







