உட்கட்சி விவகாரத்தை கவனிப்பது தேர்தல் ஆணையத்தின் பணி அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதிமுகவில் புதிய பதவிகளை உருவாக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்று தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராம்குமார் ஆதித்தன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், உட்கட்சி விவகாரத்தை கவனிப்பது தேர்தல் ஆணையத்தின் பணி அல்ல என சாடினர். அங்கீகரிக்கப்பட்ட கட்சியால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் எடுத்த முடிவை தேர்தல் ஆணையம் ஏற்று கொண்டதில் தவறில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். கட்சிக்குள் உள்ள பிரச்னைக்கு உரிமையியல் நீதிமன்றத்தில்தான் வழக்கு தொடர முடியும் எனக்கூறிய நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.







