பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு ஒரு வார கால அவகாசம் அளித்து, வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் 2 வார காலத்திற்கு ஒத்திவைத்தது.
ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், தம்மை வழக்கில் இருந்து விடுவிக்கும்படி கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு மீது விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மத்திய அரசின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து குடியரசு தலைவர்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு பேரறிவாளன் தரப்பில், தம்மை விடுவிப்பது தொடர்பாக ஆளுநர் முடிவு எடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு சுட்டிக்காட்டப்பட்டது.
இதனையடுத்து பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அரசின் தீர்மானத்தின் மீது 3 முதல் 4 நாட்களில் ஆளுநர் முடிவெடுப்பார் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவு நகலில் 4 வாரத்தில் ஆளுநர் முடிவெடுப்பார் என்று மத்திய அரசு உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த குழப்பம் தொடர்பாக பேரறிவாளன் தரப்பில் நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் முன்பு முறையீடு செய்யப்பட்ட நிலையில், ஆளுநர் முடிவெடுக்க 1 வாரம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.







