கேரளாவைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர், பிபிஇ கிட் கழிவுகளை பயன்படுத்தி படுக்கைகள் தயாரித்துள்ளார்.
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், முன்களப் பணியாளர்கள் தொற்று பரவாமல் இருக்க பிபிஇ கிட் உடை கவசங்களை பயன்படுத்துகின்றனர். ஒரு முறை பயன்படுத்திய கிட்களை மறுமுறை பயன்படுத்த முடியாது என்பதால் அவை அதன்பிறகு குப்பை கிடங்குகளுக்கு சென்றது. அதையும் பயன்படுத்தலாம் என நிரூபித்துக் காட்டியுள்ளார் கேரளாவைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் லட்சுமி மேனன்.
கேரளாவில் கொரோனா தொற்று அதிகமாக பரவிய சமயத்தில் ஒவ்வொரு கோவிட் கேர் மையத்திற்கும் 50 படுக்கைகள் புதிதாக தேவைப்பட்டது. இருந்தாலும் குறைந்த அளவிலான படுக்கைகளே அங்கு விநியோகிக்கப்பட்டன. நோயாளி டிஸ்சார்ஜ் ஆகும்போது அவர் பயன்படுத்திய படுக்கை மறுசுழற்சி செய்யப்படாமல் தீயில் எரிக்கப்படும்.
அவ்வாறு பல படுக்கைகள் எரிக்கப்பட்டிருக்கும் என எண்ணுவதாக குறிப்பிட்ட லட்சுமி, அதற்கு தீர்வு காண விரும்பினார். பிபிஇ கிட்டுகள் தயாரிக்கப்படும் தொழிற்சாலைகளுக்குச் சென்ற லட்சுமி, அங்கு ஸ்கிராப் செய்யப்பட்ட பிபிஇ கிட் துண்டுகளை சேகரித்துக்கொண்டார். சிறு சிறு துண்டுகளான அனைத்தையும் ஒன்றாக இணைத்தார். தலைமுடியை பின்னுவது போல அவற்றை 6 அடி வரை பின்னிக்கொண்டார். வளைந்து வளைந்து செல்லும் அதனை இறுதியில் இறுக்கமாகக் கட்டி படுக்கையை தயாரித்துவிட்டார்.
இதனை கோவிட் கேர் மையங்களுக்கு வழங்கியுள்ளார் லட்சுமி மேனன். இந்த படுக்கை எடை குறைவாகவும், மென்மையாகவும், சுகாதாரமாகவும் இருப்பதாக பயன்படுத்தியவர்கள் தெரிவித்தனர். துவைத்து மீண்டும் பயன்படுத்திக்கொள்ளும்படியாக அமைக்கப்பட்டுள்ள இந்த படுக்கை 3,00 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது வழக்கமான படுக்கையை விட பாதியளவு விலை குறைவாகவே உள்ளது.
இதன்மூலம் 20க்கும் மேற்பட்ட கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகவும் லட்சுமி மேனன் குறிப்பிட்டார். வீட்டில்லா மக்களுக்கு இந்த படுக்கைகளை இலவசமாக வழங்கியுள்ளார். இதுவரை 1,000க்கும் மேற்பட்ட படுக்கைகள் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்திற்கு ஷயா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
.







