முதுமலையில் இறந்த யானைக்கு வனப் பாதுகாவலர் கண்ணீர் விட்டு அழுது பிரியாவிடை கொடுக்கும் வீடியோ வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் சதிவயல் யானைகள் முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு காயமடைந்த யானைகளுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. அப்படி மசினக்குடியில் காயமடைந்து முகாமுக்கு வந்த யானைக்கு வனத் துறையினர் சிகிச்சை அளித்துவந்தனர். குறிப்பாக ஒரு வன பாதுகாவலர் அக்கறையுடன் கவனித்து வந்தார்.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் யானையை காப்பாற்ற முடியவில்லை. இறந்த யானையை பணியாளர்கள் லாரியில் ஏற்றி கொண்டு சென்றனர். அந்த சமயத்தில் லாரியின் டயர் மீது ஏறிய அந்த வனப் பாதுகாவலர், யானையின் தந்தத்தை வருடிக் கொடுத்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். இந்த உணர்வுப்பூர்வமான தருணத்தை அருகில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
வீடியோவைப் பகிர்ந்த இந்திய வனப் பணி அதிகாரிகள் சங்கம், ‘சில உணர்வுப்பூர்வமான தருணங்களை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அவரது பார்வையில் இருந்துதான் யானை மறைந்துள்ளது. இதயத்தில் அப்படியேதான் இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.







