விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்
பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்ரா பௌணர்மியையொட்டி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இக்கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், பௌர்ணமி ,அமாவாசை நாட்களில் மட்டுமே பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு மே 3 ம் தேதி முதல் மே 6 ம் தேதி வரை 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகை புரிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பறை மலைப்பாதை வழியாக மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர்.
மழையின் காரணமாக பக்தர்களுக்கு காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டுமே மலையேறி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு செல்லக்கூடிய மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
பக்தர்கள் சாமி தரிசனம் முடித்து உடனே தாணிப்பறை அடிப் பகுதிக்கு வந்து விட
வேண்டும் எனவும் பக்தர்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தினர்.







